இந்த வலைப்பதிவில் தேடு

புதன், ஏப்ரல் 4

விரல் ரேகையை பதிவு செய்து காஸ் சிலிண்டர் வழங்கல்: புதிய முறை அறிமுகம்.

புதுடில்லி :ஏழைகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள், உரியவர்களைச் சென்றடைவதை உறுதி செய்வதற்காக, முன்னோடித் திட்டம் ஒன்று மைசூரு, புனே மற்றும் ஐதராபாத் நகரங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

சமையல் எரிவாயு சிலிண்டர்கள், ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களுக்கு குறைந்த விலையில் கிடைக்க வேண்டும் என்பதற்காக, மத்திய அரசு பெருமளவு மானியம் வழங்கி வருகிறது. அதனால், சர்வதேச சந்தை நிலவரங்களை ஒப்பிடுகையில், சமையல் எரிவாயு சிலிண்டர்கள் அதன் அடக்க விலையில் பாதிவிலை அளவுக்கு வீடுகளுக்கு சப்ளை செய்யப்படுகின்றன. அப்படி குறைந்த விலையில் சப்ளை செய்யப்படும் சிலிண்டர்கள், பல நேரங்களில் அருகில் உள்ள கடைகளுக்கும் சென்று விடுகின்றன.

26 ஆயிரம் பேர் தேர்வு :ஒருவர் பெயரில் பதிவு செய்யப்பட்ட எரிவாயு சிலிண்டர்களை, அவர்களின் பிரதிநிதிகளாகச் செயல்படும் மற்றவர்கள் வாங்கி, அதை கூடுதல் விலைக்கு விற்று விடுவதும் நிகழ்கிறது.இதுபோன்ற முறைகேடுகளைத் தடுப்பதற்காக, முன்னோடித் திட்டம் ஒன்று செயல்படுத்தப்படுகிறது. இதற்காக மைசூர், புனே, ஐதராபாத் நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, ஆதார் அடையாள அட்டையை பெருமளவு பெற்றவர்கள் வசிக்கும் பகுதிகளில், இந்த முன்னோடித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. உதாரணமாக, மைசூரில், மத்திய அரசால் வழங்கப்பட்ட ஆதார் அடையாள அட்டைகளை 10ல் ஒன்பது பேர் வைத்திருக்கின்றனர்.

சிலிண்டர் சப்ளை எப்படி?அதனால், அங்கு 26 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், இந்த முன்னோடித் திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டு, இதுவரை 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்திற்காக, "ஐகேட் -பாட்னி' என்ற நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட தொழில் நுட்பமும் பயன்படுத்தப்படுகிறது.இந்த திட்டத்தின்படி, சமையல் எரிவாயு சிலிண்டர் வினியோகம் செய்யும் ஏஜென்சியைச் சேர்ந்த டெலிவரி செய்பவர் , ஒரு வீட்டிற்கு சமையல் எரிவாயு சிலிண்டர் கொண்டு வரும்போது, கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தினால், அதற்கேற்ப பணப்பட்டுவாடா நேர் செய்யும் கையடக்க கருவி போன்ற தனி இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது.

அந்த இயந்திரம், ஆதார் அடையாள அட்டைக்கான சர்வருடன், ஜி.ஆர்.பி.எஸ்., முறையில் இணைக்கப்பட்டிருக்கும். யார் பெயரில் சமையல் எரிவாயு சிலிண்டர் பதிவு செய்யப்பட்டு, வினியோகம் செய்யப்படுகிறதோ, அந்த நபர், குறிப்பிட்ட இயந்திரத்தில், தன் விரல் ரேகையை வைக்க வேண்டும். அப்படி வைக்கும்போது, அவர் ஏற்கனவே ஆதார் அடையாள அட்டை பெறுவதற்காக, பதிவு செய்திருக்கும் விரல் ரேகைகளுடன் ஒப்பிட்டுப் பார்த்து உறுதி செய்யப்படும் . இதன் மூலம் அவரின் அடையாளம் உறுதி செய்யப்பட்ட உடன் சிலிண்டர் சப்ளை செய்யப்படும்.

மானியம் மாறும் முறை:சமையல் எரிவாயு சிலிண்டர் சப்ளையை இந்த முறையில் எளிதாகச் செய்து விடலாம் என்றாலும், அந்த எரிவாயு சிலிண்டருக்கான மானியத்தை, எப்படி நுகர்வோருக்கு மாற்றலாம் என்பதை இன்னும் மத்திய அரசு முடிவு செய்யவில்லை. இதற்காக இரண்டு விதமான வழிகளை பரிசீலித்து வருகிறது. அதில், ஒன்று, சமையல் எரிவாயு சிலிண்டர் சப்ளை செய்யப்பட்ட உடன், அதற்கான முழு கட்டணமான 920 ரூபாயையும், சிலிண்டரைப் பெறுபவர் செலுத்திவிட வேண்டும்.

வங்கிக் கணக்கில் வரவு: அதேநேரத்தில், இவரது அடையாளம் விரல் ரேகை பதிவு மூலம் உறுதி செய்யப்பட்டவுடன், எரிவாயு சிலிண்டருக்காக, இவருக்குக் கிடைக்க வேண்டிய மானியத் தொகை, அரசின் வங்கிக் கணக்கில் இருந்து, இவரது வங்கி கணக்கில் உடனடியாகச் செலுத்தப்படும் .நுகர்வோர் இதற்கான மொத்தப் பணத்தைச் செலுத்த வசதி இல்லாதவர் எனில், முதலில் அவர் கணக்கில் மானியத் தொகையைச் சேர்க்கும் நடைமுறையும் உள்ளது.

இந்த முன்னோடித் திட்டத்தை செயல்படுத்த தேர்வு செய்யப்பட்டுள்ள, மைசூரைச் சேர்ந்த இன்டேன் காஸ் வினியோகஸ்தரான வீனஸ் காஸ் சர்வீசஸ் நிறுவனத்தின் உரிமையாளர் வினோத் மாரோலி கூறியதாவது:90 சதவீத வெற்றி முன்னோடியான இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த, எங்கள் நிறுவனத்தைத் தேர்வு செய்ததில் பெருமை அடைகிறோம். இந்தத் திட்டத்தைத் துவக்கும் முன்னர், மத்திய அரசு அதிகாரிகளும், ஆதார் அடையாள அட்டை குழுவினரும், இந்தியன் ஆயில் நிறுவனத்தினரும் எங்களிடம் கடந்த ஆண்டு முழுவதும் பலமுறை ஆலோசனை நடத்தினர். தற்போது திட்டம் சுமுகமாக அமல்படுத்தப்படுகிறது. ஆரம்பத்தில் 15 சதவீதம்தான் வெற்றிகரமாக நிறைவேற்றினோம். தற்போது 90 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.இருந்தாலும், இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதில், பல பிரச்னைகள் உள்ளன. வேறு சிலரோ அரசின் பல்வேறு கட்டுப்பாடு மற்றும் வரன்முறைகளைப் பார்த்து மானியவிலை வேண்டாம் என்று ஒதுங்கியதும் உண்டு.இவ்வாறு மாரோலி கூறினார்.