சென்னை: பள்ளி மாணவர்களுக்கு, இலவச சீருடை, காலணி, புத்தகப் பை, வண்ணப் பென்சில் ஆகியவற்றை வழங்க தமிழக முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுகுறித்து அரசு செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, "இந்த 2012-13 கல்வியாண்டு முதல் தொடக்கக் கல்வி மற்றும் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகள், நகராட்சி மற்றும் மாநகராட்சிப் பள்ளிகள் ஆகியவற்றில் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தின் கீழ் 1வது வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு, தற்போது வழங்கப்பட்டு வரும் இரண்டு இணை சீருடையுடன், கூடுதலாக 2 இணை சீருடை அதாவது மொத்தம் நான்கு இணை சீருடை வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதில் 6ம் வகுப்பு மற்றும் அதற்குமேல் பயிலும் மாணவர்களுக்கு அரைகால் சட்டைக்கு பதிலாக, முழுக்கால் சட்டையும், மாணவியர்களுக்கு பாவாடை-தாவணிக்குப் பதிலாக சல்வார்-கமீசும் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இதன்மூலம் 23 லட்சத்து 33 ஆயிரத்து 418 மாணவர்களும், 23 லட்சத்து 51 ஆயிரத்து 660 மாணவிகளும் என மொத்தம் 46 லட்சத்து 85 ஆயிரத்து 78 பள்ளி மாணவர்கள் பயன்பெறுவர். இதனால் அரசுக்கு 259 கோடியே 95 லட்சம் ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும்.
மேலும், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், 1 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவ, மாணவியருக்கு விலையில்லா ஒரு இணை காலணி வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் 35 லட்சத்து 556 மாணவ-மாணவியர் ஒவ்வொருவருக்கும் 96 ரூபாய் மதிப்பில், 1 இணை காலணியும், 6 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் 27 லட்சத்து 95 ஆயிரத்து 639 மாணவ-மாணவியர் ஒவ்வொருவருக்கும் 127 ரூபாய் மதிப்பில், 1 இணை காலணியும், 9 மற்றும 10ம் வகுப்பு பயிலும் 18 லட்சத்து 5ஆயிரத்து 933 மாணவ-மாணவியர் ஒவ்வொருவருக்கும் 142 ரூபாய் மதிப்பில் ஒரு இணை காலணியும் இந்த ஆண்டே வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்த விலையில்லா காலணி வழங்கும் திட்டத்திற்காக, அரசுக்கு 94 கோடியே 76 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும். இதன்மூலம் 81 லட்சத்து 2 ஆயிரத்து 128 மாணவ-மாணவியர் பயன்பெறுவர்.
இதுமட்டுமில்லாமல், மாணவ-மாணவியர்களிடம் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளை நீக்கும் நல்லெண்ணத்துடன், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவ, மாணவியருக்கும் ஒரே மாதிரியான புத்தகப் பைகள், கற்றலுக்குத் தேவையான ஜியோமெட்ரி பாக்ஸ், கிராமப்புற மாணவ-மாணவியருக்கு இதுவரை கிடைக்கப்பெறாத வண்ணப் பென்சில்கள் மற்றும் புவியியல் படங்கள் ஆகியவற்றை வரும் கல்வியாண்டு(2012-13) முதல் வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இத்திட்டத்தின்படி, 1 முதல் 3ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவியருக்கு 75 ரூபாய் மதிப்புள்ள புத்தக பைகளும், 4 முதல் 7ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவியருக்கு 100 ரூபாய் மதிப்புள்ள புத்தக பைகளும், 8 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவியர்களுக்கு 125 ரூபாய் மதிப்புள்ள புத்தக பைகளும் வழங்கப்படும். இத்திட்டத்தினால் 92 லட்சத்து 28 ஆயிரத்து 374 மாணவ-மாணவியர் பயன்பெறுவர்.
இதேபோன்று, 6 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவியருக்கு 35 ரூபாய் மதிப்பில் ஜியோமெட்ரி பாக்ஸ் வழங்கப்படும். இதனை மாணவ-மாணவியர் 2 கல்வியாண்டுகளுக்கு பயன்படுத்தலாம். இதனையடுத்து ஒவ்வொரு கல்வியாண்டிலும் 6 மற்றும் 8 மற்றும் 10 ஆகிய வகுப்புகளில் பயிலும் மாணவ-மாணவியருக்கு ஜியோமெட்ரி பாக்ஸ் வழங்கப்படும். இதனால் 46 லட்சத்து ஒர் ஆயிரத்து 572 மாணவ-மாணவியர் பயன்பெறுவர்.
1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவியருக்கு 20 ரூபாய் மதிப்பிலான வண்ணப் பென்சில்கள் வழங்கப்படும். இதனால் 35 லட்சத்து 556 மாணவ-மாணவியர் பயன்பெறுவர். 6 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவியருக்கு 50 ரூபாய் மதிப்பிலான புவியியல் வரை படங்கள் வழங்கப்படும். முதல் ஆண்டில் 6 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவியருக்கும், இரண்டாம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் 6ஆம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவியருக்கு மட்டும் புவியியல் வரை படங்கள் வழங்கப்படும். இதனால் 46 லட்சத்து ஒர் ஆயிரத்து 572 மாணவ-மாணவியர் பயன்பெறுவர்.
புத்தகப் பை, ஜியோமெட்ரி பாக்ஸ், வண்ணப் பென்சில்கள் மற்றும் புவியியல் வரைபடங்கள் வழங்கும் இந்த திட்டத்தின் கீழ் 92 லட்சத்து 28 ஆயிரத்து 374 மாணவ-மாணவியர் பயன்பெறுவர். இத்திட்டத்திற்காக அரசுக்கு 2012-13 ஆம் கல்வியாண்டில் 136 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்.
10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளில் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் பிரிவைச் சார்ந்த மாணவ-மாணவியர் பொதுத் தேர்வுகளில் அதிக அளவு மதிப்பெண்கள் பெறுவதை ஊக்குவிக்கும் வகையில், மாவட்ட அளவில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறும் மாணவ-மாணவியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் முதல் பரிசான 1,500 ரூபாயை 3,000 ரூபாயாகவும், இரண்டாம் பரிசாக வழங்கப்பட்டு வரும் 1,000 ரூபாயை, 2,000 ரூபாயாகவும், மூன்றாம் பரிசாக வழங்கப்பட்டு வரும் 500 ரூபாயை 1,000 ரூபாயாகவும், 12 ஆம் வகுப்பில் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறும் மாணவ மாணவியர்களுக்கு முதல் பரிசாக வழங்கப்பட்டு வரும் 3,000 ரூபாயை 6,000 ரூபாயாகவும், இரண்டாம் பரிசாக வழங்கப்பட்டு வரும் 2,000 ரூபாயை 4,000 ரூபாயாகவும், மூன்றாம் பரிசாக வழங்கப்பட்டு வரும் 1,000 ரூபாயை 2,000 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கிட முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இதன்மூலம், அரசுக்கு 11 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும்.
மாணவ-மாணவியர் நலன்களுக்காக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள இந்த சலுகைகள் மூலம் பள்ளிகளில், குறிப்பாக கிராமங்களில் உள்ள பள்ளிகளில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கவும், இடைநிற்றல் முழுவதுமாக தடுக்கப்படவும் வழிவகுக்கும்" என்று கூறப்பட்டுள்ளது.