ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை பகுதியில் தமிழக அரசின் இலவச பஸ் பாஸ் வைத்திருக்கும் மாணவ, மாணவிகளை பார்த்தவுடன் அரசு பஸ்சை நிறுத்தாமல் சென்று விடுகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை திருவள்ளூர் சாலையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இதுதவிர மேலும் சில அரசு பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் செஞ்சி அகரம், பனப்பாக்கம், பேரண்டூர், பாலவாக்கம், சூளைமேனி மற்றும் பல பகுதிகளில் இருந்து 1200க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்க வருகின்றனர். இவர்கள் பெரும்பாலும் அரசு பஸ்களை நம்பி உள்ளனர். மாணவர்களுக்கு தமிழக அரசு, இலவச பஸ் பாஸ் வழங்கி உள்ளது.
இந்த மாணவர்களை பார்த்தவுடன் டிரைவர், கண்டக்டர் அரசு பஸ்சை நிறுத்துவது கிடையாது. இதனால் மாணவர்கள் தங்கள் பகுதி வழியாக செல்லும் தனியார் பால் வேன், டிராக்டர் மற்றும் ஷேர் ஆட்டோக்களில் தொங்கிக்கொண்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்று படித்து வருகின்றனர். இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பெற்றோர்களும் மாணவர்களும் வேண்டுகோள் விடுத்து உள்ளனர். இன்று காலை பால் வேனில் சென்ற மாணவர்கள் கூறுகையில், ‘‘தாராட்சியில் இருந்து படிக்க செல்கிறோம். எங்கள் ஊருக்கு வரும் அரசு பஸ்கள் எங்களை ஏற்றாமல் வந்துவிட்டது. காசு கொடுத்தால்தான் ஆட்டோவில் ஏற்றி வருவார்கள். இதனால் பால்வேனில் வந்தோம்’’ என்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக