துபாய்: துபாய் மருத்துவமனையில் கடந்த 12 மாதங்களாக கோமாவில் உள்ள தமிழக தொழிலாளி ஏர் இந்தியா விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டு அதிமுக அரசின் உதவியோடு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.
துபாய் மருத்துவமனையில் கடந்த 2013ம் ஆண்டு ஜுன் மாதம் உடல் நலக்குறைவு காரணமாக சேர்க்கப்பட்ட நடராஜன் ராமலிங்கம் (41) தற்பொழுது கோமாவில் உள்ளார். அவர் சிதம்பரத்தைச் சேர்ந்தவர். அவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளார். மற்றொரு மகன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொள்ளிடம் ஆற்றில் குளிக்கும் போது இறந்துவிட்டார். மருத்துவ நிர்வாகம் முயற்சிகள் பல மேற்கொண்டும் நடராஜன் ராமலிங்கம் கோமாவில் இருந்து திரும்பவே இல்லை. எனவே மருத்துவமனை நிர்வாகம் அவரை தாயகம் அனுப்பி வைக்குமாறு அவரது கம்பெனிக்கு அறிவுறுத்தியுள்ளது.
அந்த கம்பெனி துபாயில் இன, மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு சமுதாயப் பணியில் ஈடுபட்டு வரும் ஈமான் அமைப்பினை அணுகியது. அவரது குடும்பம் ஏழ்மையின் காரணமாக வாடகை கொடுக்கக் கூட வசதியின்றி தெரிந்தவர்கள் வீட்டில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் அவரை வீட்டுக்கு கூட்டிச் சென்று மருத்துவ சிகிச்சை அளிக்க இயலாத நிலையில் அவரது குடும்பத்தினர் இருந்து வருகின்றனர். எனவே தமிழக அரசு இவ்விஷயத்தில் உடனடியாக தலையிட்டு தமிழக மருத்துவமனையில் அவரை அனுமதிக்க உதவிட துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.
இதனையடுத்து தமிழக அரசு மறுவாழ்வுத்துறை கமிஷனர் அலுவலக கடிதம் எண் E1 / 3703 /2014 dt. 02.05.2014 துபாய் இந்திய துணைத் தூதரகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டது. இப்பணிகளுக்கு மறுவாழ்வுத்துறை இயக்குநரகத்தின் கமிஷனர் ஆனந்த் ( 044-28515288 ), துணை ரிஜிஸ்டர் மோகன்ராஜ் ( 044-28525648 ) மற்றும் அவரது அலுவலக நலத்துறை அலுவலர் உள்ளிட்டோர் மனிதாபிமான அடிப்படையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்க அனுமதி பெற்றுள்ளனர். நடராஜனின் குடும்பத்தினர் புதுச்சேரியில் இருப்பதால் அவரை ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கின்றனர். இதனையடுத்து நடராஜன் இன்று இரவு ஏர் இந்தியா விமானம் ஏஐ 906 மூலம் புறப்பட்டு நாலை காலை 5 மணிக்கு சென்னை விமான நிலையத்தை அடைகிறார்.
அதன் பின்னர் தமிழக அரசின் 108 அவசர ஊர்தி சேவை மூலம் ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்படுவார். அவருடன் ஈமான் அமைப்பின் துணைப் பொதுச் செயலாளர் திருப்பனந்தாள் ஏ முஹம்மது தாஹா, மக்கள் தொடர்பு மற்றும் ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத், பவர் குரூப் அலுவலர் கோவை தேவராஜ், துபாய் மருத்துவமனையின் செவிலியர் உள்ளிட்டோர் வருகின்றனர். ஜிப்மர் மருத்துவமனைக்கு காலை 10 மணியளவில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்பணிகளுக்கு உறுதுணையாக இருந்து அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் ஊடகங்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read more at: http://tamil.oneindia.in/news/international/tn-government-helps-coma-patient-209209.html