இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், டிசம்பர் 20

உங்கள் சேவை தொடர வாழ்த்துகிறோம்.

அஸ்ஸலாமு அலைக்கும்..
 Hats Off Iman Uae Kaithe Millath Peravai
துபாய்: துபாய் ஈமான் அமைப்பு மற்றும் அமீரக காயிதே மில்லத் பேரவையின் உதவியால் 15 ஆண்டுகளுக்குப் பின்னர் இறந்துவிட்டதாகக் கருதப்பட்ட தந்தையை சந்தித்த மகன் அவரது கரங்களை வருடி வாஞ்சையுடன் வரவேற்ற காட்சி சென்னை விமான நிலையத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 
இதன் விபரம் வருமாறு,
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜகோபால் (73). 1976ம் ஆண்டு துபாய்க்கு வேலை தேடி சென்றார். இவரது மனைவியும், மூன்று மகன்களும் திருநெல்வேலியிலேயே இருந்தனர். துபாயில் கஷ்டப்பட்டு வேலை பார்த்த ராஜகோபால் பல ஆண்டுகளுக்குப் பிறகு 1984ல் திருநெல்வேலிக்கு வந்தார். ஒரு சில மாதங்கள் குடும்பத்தினருடன் இருந்துவிட்டு மீண்டும் துபாய்க்கு சென்றுவிட்டார். அதன் பிறகு ஊர் திரும்பவில்லை. துபாயில் இரண்டாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்துவிட்டார். இதனால் முதல் மனைவி மற்றும் மகன்களுடன் தொடர்பு இல்லாமல் போனது. எப்போதாவது பணம் மட்டும் அனுப்புவார். 
இந்நிலையில் இரண்டாவது மனைவியுடனான தொடர்பும் இல்லாமல் போனது. மூன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் இருதய பாதிப்பு மற்றும் பக்கவாதம் காரணமாக துபாய் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இவரைப் பற்றிய விபரங்கள் எதுவும் கிடைக்காததால் மருத்துவமனை நிர்வாகத்தினர் இந்திய தூதரகத்ததின் உதவியை நாடினர். எனினும் அவரது குடும்பத்தினரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. 
இந்திய தூதரக அதிகாரிகள் ஈமான் மற்றும் அமீரக காயிதே மில்லத் பேரவை நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்து ராஜகோபாலை அவரது குடும்பத்தினருடன் சேர்ப்பிக்க ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொண்டனர். ஈமான் பொதுச் செயலாளர் குத்தாலம் ஏ. லியாக்கத் அலி, அமீரக காயிதே மில்லத் பேரவை பொதுச் செயலாளர் ஏ. முஹம்மது தாஹா, ஈமான் ஊடகத்துறை மற்றும் மக்கள் தொடர்பு செயலாளர் முதுவை ஹிதாயத் ஆகியோர் மருத்துவமனை சென்று அங்குள்ள அதிகாரிகளிடம் அவரைப் பற்றிய விபரங்களை கேட்டுக்கொண்டு புகைப்படத்துடன் பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகளில் செய்தி வெளியிட்டனர். 
இதனைப் பார்த்த முதல் மனைவி தனது மூத்த மகன் சுந்தர்ராஜனிடன் தெரிவித்து தந்தையை கொண்டுவர ஏற்பாடு செய்திட கேட்டுக் கொண்டார். சுந்தர்ராஜன் துபாய் ஈமான் அமைப்பினரை தொடர்பு கொண்டு தனது தந்தையினை தாயகம் அழைத்து வர ஏற்பாடு செய்திடுமாறு கேட்டுக் கொண்டார். அதன்படி இந்திய தூதரகத்தின் முழு ஒத்துழைப்புடன் கடந்த 16.12.2012 அன்று மாலை ஏர் இந்தியா விமானத்தில் துபாயில் இருந்து புறப்பட்டு 17.12.2012 அன்று காலை அவரது மகன் சுந்தர்ராஜனிடம் அமீரக காயிதே மில்லத் பேரவை பொதுச்செயலாளர் ஏ. முஹம்மது தாஹா, முதுவை ஹிதாயத் ஆகியோர் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் ராஜகோபாலை ஒப்படைத்தனர். தந்தையை பெற்றுக் கொண்ட சுந்தர்ராஜன் மிகவும் நெகிழ்ச்சியுடன் இப்பணியில் மிகவும் ஒத்துழைப்பு நல்கிய துபாய் இந்திய தூதரகம், ஈமான் மற்றும் அமீரக காயிதே மில்லத் பேரவையினருக்கும், ஊடகங்களுக்கும் தனது குடும்பத்தினரின் நன்றிகளை தெரிவித்துக்கொண்டு விடைபெற்றார். 
இந்நிகழ்வில் 'நகைச்சுவை பேரரசு' தேவகோட்டை ராமநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்
.
ஜனாப்.முஹமது தாஹா அவர்களையும் மற்றும் முதுகளத்தூர் ஹிதாயத் அவர்களையும்  பாராட்டி மகிழ்கிறது திருப்பனந்தாள் ஜமாத்தார்கள் மற்றும் நண்பர்கள்..
உங்கள் சேவை தொடர வாழ்த்துகிறோம். 
நன்றி : தினமலர் , முதுகளத்தூர்.காம் & thatstamil.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக