இந்த வலைப்பதிவில் தேடு

சனி, பிப்ரவரி 11

மாணவர்கள் தோல்வியை கண்டு துவளக்கூடாது:திரைப்பட இயக்குனர் சசிக்குமார் பேச்சு.

கும்பகோணத்தை அடுத்த கோவிலாச்சேரி அன்னை கல்லூரியின் ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. கல்லூரி செயலாளர் ஹீமா யூன் வரவேற்றார். சினிமா நடிகர் சூரி வாழ்த்துரை வழங்கினார்.விழாவில் கல்லூரி தாளாளர் அப்துல் கபூர், தலைவர் அன்வர்கபீர், முதல்வர் மணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் கலந்து கொண்டு திரைப்பட இயக்குனர் சசிக்குமார் பேசியதாவது:-
 மாணவர்கள் தோல்வியை கண்டு துவளக்கூடாது:திரைப்பட இயக்குனர் சசிக்குமார் பேச்சு
அன்னை கல்லூரிக்கும் எனக்கும் பல ஆண்டுகளாக தொடர்பு உள்ளது. இருந்தாலும் கடந்த 4 ஆண்டுகளாக இந்த கல்லூரியின் விழாவில் நான் பங்கேற்று வருகிறேன்.காரணம் இந்த கல்லூரியில் பேராசிரியர்கள், மாணவர்கள், நிர்வாகத்தின் ஒத்துழைப்போடு ஒரு அற்புதமான திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர்.

அதாவது ஏழ்மையில் நன்றாக படிக்க முடிந்தும், நிதி வசதி இல்லாத மாணவர்களை சக மாணவர்கள் நிதி உதவி வழங்கி அவர்களுக்கு தேர்வு கட்டணம் உள்பட கல்வி உதவியை வழங்கி வருகின்றனர்.

தமிழகத்தில் எந்த கல்லூரியிலும் இது போன்ற ஒரு திட்டம் இல்லை. ஆனால் கும்பகோணம் அன்னையின் புரட்சி என்ற பெயரில் மாணவர்கள் மறுமலர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நான் இந்த விழாவில் அதிகம் பேசப்போவதில்லை. அதற்கு பதில் செயல்பாட்டில் இறங்க போகிறேன். மாணவர்கள் உண்மை பேச வேண்டும். உண்மையை பேசினால் உழைப்பு தன்னால் வந்து விடும்.

மாணவ பருவத்தினர் தோல்வியை கண்டு துவளக்கூடாது. வெற்றியையும், தோல்வியையும் ஒன்றாக கருதும் மனப்பக்குவம் பெற வேண்டும். இனிமேல் என்னை விழாவிற்கு அழைக்கும் எந்த கல்லூரியாக இருந்தாலும் மாணவர்கள் மறுமலர்ச்சி திட்டத்தை செயல்படுத்தும் கல்லூரிக்கு மட்டுமே நான் செல்வேன். அந்த திட்டத்தை இனி மேல் அனைத்து கல்லூரிகளும் செயல்படுத்த வேண்டும். அதற்கு அன்னை கல்லூரி ஒரு முன்மாதிரியாக செயல்படுவது பாராட்டுக்குரியது.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் மாணவர்கள் மறு மலர்ச்சி திட்டத்தில் அவர் தன்னையும் இணைத்து கொண்டு அதற்காக ரூ.15 ஆயிரம் நிதி உதவியை வழங்கி, விழாவில் கலந்து கொண்ட மாணவர்களிடமும், பொது மக்களிடமும் நிதி வசூலித்தார்.

இதை தொடர்ந்து பல்வேறு கல்லூரிகளில் இருந்து வந்திருந்த மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கலைநிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் பேராசியர் ரமேஷ், செய்தி தொடர்பாளர் திவான் ஆகியோர் செய்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக