இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், ஜனவரி 17

நடிகன் என்னும் பொய்வேஷம் !

எப்பொழுதும் போலத் தான் அன்றைய பொழுதும் விடிந்தது தொழிலதிபர் ராஜசேகரன் இல்லத்திற்கு. வழக்கம் போல முதலில் தேநீர் முகத்தில் தான் முழித்தார் ராஜசேகரன். ஆனால் மனைவி வைஷ்ணவி இன்று போட்ட டீ இன்று மிகவும் நன்றாக தெரிந்தது இராஜசேகரனுக்கு.

இராஜசேகரன் பிறப்பால் ஓர் பெரிய தொழில் அதிபர் தான் என்று பார்ப்பவர்கள் எல்லாம் நினைப்பார்கள். ஆனால் அவர் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். அப்பா கிடையாது. அம்மா மட்டுமே. அவளும் இராஜசேகரனுக்கு பதினைந்து வயது இருக்கும் போதுஇறந்து போனார். தங்கள் குடும்பத்திற்கு என இருந்த ஒரே நிலத்தையும் விற்று அதில் கிடைத்த லட்சம் ரூபாய் முதலீட்டை கொண்டு ஓர் சிறிய ரைஸ் மண்டி வைத்தார். இன்று அந்த தொழிலில் பெரிய மனிதராகி கார்... பங்களா அப்பப்பா.

பணத்தின் அருமை தெரிந்த ஒருத்தியே தனக்கு மனைவியாய் வர வேண்டும் என்ற இராஜசேகரனின் ஆசைபடியே, இராஜசேகரின் வீட்டிற்கு விளக்கேற்றியவள் தான் வைஷ்ணவி.

அவர்களுக்கு பிறந்த மூத்த மகன் தான் ரமேஷ். அவன் செல்வந்தர் மகன் என்பதால் நல்ல செலவழிப்பான். இது தான் ராஜசேகரனுக்கும் ரமேஷ்க்கும் இடையே அடிக்கடி பிரச்சனை எழும்பக் காரணம் ஆகும்.

இரண்டு பேருக்குமிடையே ஏற்படும் பிரச்சனையை தீர்த்து வைப்பதற்கே நேரம் சரியாய் போய்விடும் வைஷ்ணவிக்கு. இராஜசேகரன் ஒரு பைசாவை கூட செலவு செய்வது என்றால் மிகவும் யோசிக்க கூடியவர்.

அவரது தும்மலும் கூட பத்து பைசா வரயே செல்லும். ஆனால் இராஜசேகரன் கருமியல்ல. பணத்தின் அருமை புரிந்தவர். இந்த நிலையில் தான் ஒரு சிக்கல்.

இதுவரைக்கும் அவரது ரைஸ் மண்டியிலிருந்து கிடைத்த லாபம் நிர்வாகச் செலவு போக ஓர் அளவிற்கே உட்பட்டு இருந்தது. ஆனால் இப்பொழுது விளைச்சல் குறையவும் லாபம் அதிகமாயிற்று. அதனால் தான் வருமானவரி கட்ட வேண்டிய சிக்கல் வந்தது. வைஷ்ணவியும் ஏற்கனவே இதை ஞாபகப்படுதிக் கொண்டு இருக்கிறாள். ஆனால் இராஜசேகரன் இந்த விஷயத்தில் தாமதம் காட்டி வந்தான்.

இன்றைய செய்தித்தாளை பேப்பர்காரன் வாசலில் அவனுக்கே உரிய தோரணையில் வாசலில் விட்டெரிந்து விட்டு "அம்மா பேப்பர்" என்று ராகமும் பாடினான்.

வழக்கம் போல வைஷ்ணவி தான் வந்து பேப்பரை எடுத்தாள். செய்தித்தாளின் முன் பக்கத்தில் கொட்டை எழுத்தில் அச்சிடப்பட்டு இருந்த செய்தி வைஷ்ணவி கண்ணில் பட்டது.

"என்னங்க" ஒரே உச்ச சாயலில் கூப்பிட்டாள் வைஷ்ணவி.

"என்ன வைஷ்ணவி! காலம் காத்தால" என்றார் இராசசேகரன்.

"இத பாருங்க! இந்த நியூஸ் பேப்பர்ல என்ன போட்டிருக்குன்னு பாருங்க"

"என்ன போட்டிருக்கு! கொடு பார்ப்போம் வருமான வரி கட்டாதவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை தொழிலதிபர் மீது வருமானவரி சோதனை"

"அதற்கு என்ன செய்ய சொல்லுற" என்றார் இராசசேகரன் ஒன்றும் தெரியாதவர் போல
" என்ன செய்யவா" பத்ரகாளி ஆனால் வைஷ்ணவி.

"ஆமாங்க! நான் சொல்லறது கிண்டலாய் தாங்க இருக்கும் உங்களுக்கு. வருமான வரி கட்டாமல் ஏய்ப்பது நமது நாட்டிற்கு நாம் தெரிந்தே செய்கிற துரோகம்ங்க" என்று ஒரு பாடமே நடத்தினாள் வைஷ்ணவி.

"வருமான வரி கட்டணும்ணா. நமக்கு வருகிற லாபத்திற்கு எவ்வளவு கட்டணும். காசோட அருமை தெரிஞ்சா தானே உனக்கு" பதிலுக்கு இராஜசேகர்.

"இப்ப காசு கட்ட பயந்தா. பிறகு சிறைக்கு போன பின்னாடி பணம் நெறைய செலவழிக்கணும். அது மட்டுமா ,மன உளைச்சல் வேறு" இது வைஷ்ணவி.

"பாத்துகிட்டே இரும்மா இவரு கம்பிதான் எண்ணப் போறாரு. இராஜசேகரனு பேரு வைச்சதும் போதும் இவருக்கு வரவர வில்லன் கெட்டப் வந்து விட்டது" இளமைக்கே உரிய துள்ளலுடன் ரமேசும் சேர்ந்து கொண்டான்.

"ம்... இந்த வீட்ல என்னை நிம்மதியாவே இருக்கவே விடுறாங்க இல்ல" சலித்து கொண்டார் இராஜசேகரன்.

வழக்கம் போல இராகம் பாட ஆரம்பித்தாள் வைஷ்ணவி " எம் பேச்சை இந்த வீட்ல யாருதான் கேட்கறாங்க. புருஷன் அப்படி, புள்ள இப்படி" இடைஇடையே அவளது பாட்டிற்கு ஏற்ப தாளம் போட்டன வைஷ்ணவி வீட்டு சமையலறை பாத்திரங்கள்.

வீட்டில் யாரும் பேசவில்லை. இராஜசேகரனுக்கு ஒரே தஞ்சம் தொலைக்காட்சிப் பெட்டி அவருக்கு பிடித்த நடிகர் கமலேஸ் குமார் வருமானவரி கட்ட வேண்டும் என்பதை பற்றி தொலைகாட்சியில் பேசினார்.

மதியம் இராஜசேகரன் வீட்டிற்கு வந்தார். "வைஷ்ணவி இந்த பைலை பத்தரமாக வை; இதுல வருமான வரி கட்டியதற்கான விபரமெல்லா இருக்கு சரியா" என்றார் இராஜசேகர்.

"வருமானவரியா? கட்டி விட்டீர்களா? எப்படி" தொடர்ந்தாள் வைஷ்ணவி.

"நடிகர் கமலேஷ் குமார் சொன்ன பிறகு தான் வருமான வரி கட்ட வேணுங்கிறது நியாமுன்னு தெரிஞ்சது"

"நாங்க சொன்னத கேக்கல. கமலேஷ் குமார் சொன்னா கேட்கிறார். இனிமே எதையாவது இவர செய்ய வைக்க வேணுமுன்னா, கமலேஷ் குமாரத்தான் கூப்பிடனும்" நொந்து போனாள் வைஷ்ணவி.

மறுநாள்,

செய்தித்தாளில் வந்த செய்தி இராசசேகரனை அதிர செய்தது. செய்தி இதுதான்.

"நடிகர் கமலேஷ் குமார் வருமானவரி ஏய்ப்பு. அவரது வீட்டில் வருமான வரி அதிகாரிகள் சோதனை."

நடிகன் என்னும் பொய் வேஷத்தை நம்பிய இராஜசேகரன் மனம் குறுகிப் போனது.

நன்றி : கூடல் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக