திருச்சி: தென்மேற்கு வங்க கடலில் இலங்கை கடற்கரைக்கு அப்பால் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ள காரணமாக டெல்டாவில் திருவாரூர், நாகை மாவட்டங்களில் பலத்த மழையும், மற்ற மாவட்டங்களில் பரவலாக மழையும் பெய்தது.

திருச்சி, தஞ்சை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. அதிராம்பட்டினம் பகுதியில் அதிகாலை 3 மணி முதல் நாள் முழுவதும் விட்டுவிட்டு பலத்த மழை பெய்தது. இந்த மழையால் உப்பள பாத்திகளில் மழைநீர் புகுந்து உற்பத்தி பாதிக்கப்பட்டது. திடீர் மழையால் அறுவடை நிலையில் உள்ள சம்பா பயிர்களுக்கு எந்த பயனுமில்லை. அதேசமயம் ஊடுபயிரான உளுந்து மற்றும் பயறு வகை பயிர்கள், மானாவாரி பயிர்களான நிலக்கடலை, எள், சோளம் போன்றவற்றுக்கு பயன் தரும் என விவசாயிகள் தெரிவித்தனர்.
திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப் பூண்டி, முத்துப்பேட்டை, நன்னிலம், வலங்கைமான், குடவாசல், நீடாமங்கலம், கோட்டூர் போன்ற பகுதிகளில் பலத்த மழை பெய்தது. முத்துப்பேட்டையில் அதிகளவாக 66.4 மிமீ மழை பெய்தது.பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை மாவட்டத்தில் பரவலாக நேற்று காலையில் லேசான தூறல் மழை பெய்தது. குமரி, தூத்துக்குடியிலும் நல்ல மழை பெய்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக