சென்னை: புதிய காற்றழுத்த தாழ்வுநிலையால் சென்னையில் காலை முதல் விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் அலுவலகம் மற்றும் பள்ளிக்கு செல்வோர் பாதிக்கப்பட்டனர். தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களில் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருவதால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பில் பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், தமிழகத்தில் கடலோர மாவட்டங்களிலும் உள் மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது.
சென்னையில் நேற்று நள்ளிரவு நேரத்தில் நுங்கம்பாக்கம், மயிலாப்பூர், சாந்தோம், மந்தைவெளி உள்ளிட்ட இடங்களிலும், பல்வேறு புறநகர்ப் பகுதிகளிலும் மழை பெய்தது. காலை நேரத்தில் விட்டு விட்டு மழை பெய்து வந்ததால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்களும், அலுவலர்களும் பாதிக்கப்பட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்றிரவு தொடங்கிய கனமழை காலைவரை நீடித்தது.இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் அங்கு நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. கனமழை காரணமாக திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு நோக்கி நகர்ந்துள்ளதால் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவித்துள்ளது.