இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், நவம்பர் 21

குடந்தையை மாவட்டமாக்கக் கோரி வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு


கும்பகோணம்: கோவில் நகரமான கும்பகோணம் மகாமக சிறப்புடையது. இத்தகைய சிறப்புடைய இந்நகரில் அரசு போக்குவரத்துக் கழகத்தின் தலைமையிடம், மாவட்ட பதிவாளர் அலுவலகம், வருமான வரி அலுவலகம், மாவட்ட தலைமை மருத்துவமனை மற்றும் ஏனைய அரசு அலுவலகங்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் சிட்டியூனியன் வங்கி தலைமை அலுவலகம், இந்தியன் வங்கி வட்டார தலைமை அலுவலகம், கும்பகோணம் பரஸ்பர சகாயநிதி தலைமையிடம், நகர பெனிபிட் பண்டின் தலைமையிடம் மற்றும் தமிழ்நாடு நெல்பொருள்கொள்முதல் கிடங்கு, மார்க்கெட் கமிட்டி உள்ளிட்ட பல அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.மாவட்ட தலைநகருக்குரிய அனைத்து வசதிகளும் உள்ள இந்நகரம் சுற்றுலா நகரமாகவும் திகழ்கிறது.

நவக்கிரக கோவில்களுக்கு செல்வதற்கும், ஆறுபடை வீடுகளில் நான்காவது படைவீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயில், யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில் ஆகியவற்றிற்கு செல்வதற்குரிய நகரமாக திகழ்கிறது.நூற்றாண்டை கடந்த தென்னக கேம்பிரிட்ஜ் என அழைக்கப்படும் அரசினர் தன்னாட்சி கல்லூரி, கோபால்ராவ் நூலகம், மகளிர் கல்லூரி மற்றும் நூறு ஆண்டுகளை கடந்த நீதிமன்றங்கள் ஆகியவைகளை கொண்டதாக திகழும் இந்நகரை மாவட்ட தலைநகரமாக ஆக்கவேண்டும் என அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் நேரத்தில் கோரிக்கை விடப்பட்டது. ஆனால், அரசிடமிருந்து எந்தவிதமான அறிவிப்பும் வரவில்லை.

இந்நிலையில் நேற்று கும்பகோணம் வக்கீல்கள் சங்கத்தில் சங்கத்தலைவர் சக்கரபாணி தலைமையிலும், சங்க செயலாளர் செந்தில்ராஜன் முன்னிலையில் அவசர பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் வக்கீல்கள் பலர் பங்கேற்றனர்.அவர்கள் நடத்திய ஆலோசனைக்குப்பிறகு கும்பகோணத்தை தலைநகராக கொண்டு மாவட்டமாக மாற்ற தமிழக அரசை வலியுறுத்தி நேற்றும், இன்றும் 19ம்தேதி இரு நாட்களிலும் நீதிமன்ற பணியிலிருந்து விலகியிருப்பது என தீர்மானித்தனர்.இதையடுத்து நீதிமன்ற பணிகளை அனைத்து வக்கீல்களும் புறக்கணிப்பு செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக