1996-ம் ஆண்டு உலக கோப்பை அரை இறுதி ஆட்டம் கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடந்தது. இந்தியா-இலங்கை மோதிய இந்த ஆட்டத்தில் இலங்கை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அப்போதைய இந்திய அணி கேப்டன் அசாருதீன் டாஸ் வென்று இலங்கையை முதலில் ஆட அழைத்தார்.
இலங்கை அணி 8 விக்கெட்டுக்கு 251 ரன் எடுத்தது. பனிதுளி காரணமாக இந்திய அணியின் விக்கெட்டுகள் சரிந்தன. 129 ரன்னுக்கு 8 விக்கெட் என்ற நிலையில் இருந்தபோது ரசிகர்கள் வீரர்களின் மோசமான ஆட்டத்தால் ரகளையில் ஈடுபட்டனர். இதனால் இலங்கை வென்றதாக அறிவிக்கப்பட்டது.
அசாருதீன் டாஸ் வென்று ஏன் முதலில் பேட்டிங் செய்யவில்லை என்று அப்போதே இது தொடர்பாக விமர்சிக்கப்பட்டது. ஜெயசூர்யா-கலுவதர்னாவின் தொடக்க ஜோடி அதிரடியாக ஆடியதால் இலங்கை அணி எந்த இலக்கையும் எடுக்க கூடிய நிலை இருந்தது.
லீக் ஆட்டத்தில் இந்தியா எடுத்த 271 ரன்னை இலங்கை எளிதாக எடுத்து வெற்றி பெற்றது. இதன் காரணமாக இலங்கை அணிக்கு எதிரான அரை இறுதியில் முதலில் பீல்டிங்கை தேர்வு செய்ததாக அப்போதே அசாருதீன் மற்றும் அணி நிர்வாகம் விளக்கம் அளித்தது.
இந்த நிலையில் 1996 உலக கோப்பையில் இலங்கைக்கு எதிரான அரை இறுதி ஆட்டம் மேட்ச் பிக்சிங் (சூதாட்டம்) செய்யப்பட்டு இருப்பதாக சந்தேகிக்றேன் என்று அப்போதைய அணியில் இடம் பெற்று இருந்த வினோத் காம்ப்ளி அதிரடியாக தற்போது குற்றம் சாட்டியுள்ளார்.
டாஸ் வென்று முதலில் பீல்டிங்கை தேர்வு செய்த முடிவு தனக்கு அதிர்ச்சி அளித்ததாகவும், அதோடு தனது கிரிக்கெட் வாழ்க்கை முடிந்து விட்டதாகவும் தொலைக்காட்சி பேட்டியில் அவர் குற்றம் சாட்டியிருந்தார். இதை அசாருதீன் மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
காம்ப்ளி ஒரு முட்டாள். என்ன பேசுவது என்று கூட தெரியாமல் பேசுகிறார். அவரது குற்றச்சாட்டு முற்றிலும் முட்டாள் தனமானது. டாஸ் வென்றால் முதலில் பீல்டிங்கை தேர்வு செய்ய வேண்டும் என்பதை ஒரு தினத்துக்கு முன்பே அணி வீரர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. வீரர்கள் ஒட்டு மொத்தமாக முடிவு செய்தே பீல்டிங்கை தேர்வு செய்தோம்.
அணி வீரர்களின் கூட்டம் நடக்கும் போது காம்ப்ளி தூங்கி கொண்டிருந்தார் என்பதை என்னால் உறுதியாக கூறமுடியும். காம்ப்ளி தனது நடத்தையினாலேயே அணியில் இருந்து நீக்கப்பட்டார். குடித்துவிட்டு இரவு நேரத்தில் தாமதமாக வருவது, அடிக்கடி சண்டை போடுவது என்பது அவரது வாடிக்கை. இது அனைவருக்கும் தெரிந்தது.
காம்ப்ளின் இந்த குற்றச்சாட்டு அப்போதைய இந்திய அணியில் இடம் பெற்று இருந்த சஞ்சய் மஞ்சுரேக்கர், நயன் மோங்கியா, வெங்கடபதி ராஜூ மற்றும் மேலாளர் அஜீத் வடேகர் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். அசாருதீனுக்கு ஆதரவாக அவர்கள் கருத்து கூறியுள்ளனர்.
சஞ்சய் மஞ்ச்ரேக்கர்: 1996 உலக கோப்பை அரை இறுதியில் முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. தவறான முடிவு தான். ஆனால் இந்த முடிவை எல்லோரும் இணைந்து தான் எடுத்தோம். இது நேர்மையான முடிவு தான்.
வெங்கடபதி ராஜூ: அந்தப்போட்டியில் சூதாட்டம் நடந்து இருப்பதாக நான் கருதவில்லை. காம்ப்ளி தற்போது பொய்யான குற்றச்சாட்டை கூறியுள்ளார். பவுலிங்கை தேர்வு செய்தது ஒட்டு மொத்த முடிவாகும்.
மோங்கியா: இந்திய கிரிக்கெட்டில் தேவையில்லாத மோசமான சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். இந்திய அணியின் தோல்விக்கு காரணம் எதுவும் இல்லை. வீரர்கள் சிறப்பாக ஆடாததே தோல்வியாக அமைந்தது.
அஜீத் வடேகர்: (அப்போதைய மானேஜர், இந்திய அணி முன்னாள் கேப்டன்): ஆடுகளத்தை தவறாக கணித்து விட்டோம். பீல்டிங் முடிவு ஒட்டு மொத்தமானது. கால் இறுதியில் நாங்கள் பாகிஸ்தானை தோற்கடித்து இருந்ததால் அதிக நம்பிக்கையில் இருந்தோம். காம்ப்ளி இந்த புகாரை இப்போது கூறி இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. 15 ஆண்டுகளுக்கு பிறகு அவர் திடீரென இந்த சூதாட்ட குற்றச்சாட்டை கூறுவது ஏன்? இலங்கை அணி சேஸ் செய்வதில் சிறந்த அணி என்பதால் டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்வது என்று எல்லோரும் சேர்ந்து முடிவு எடுத்திருந்தோம். காம்ப்ளியின் தேவையில்லாத இந்த குற்றச்சாட்டு சந்தேகம் அளிப்பதால் கிரிக்கெட் வாரியம் விசாரணை நடத்த வேண்டும்.
முன்னாள் கேப்டன் கங்குலியும் காம்ப்ளியின் குற்றச்சாட்டு முட்டாள் தனமானது என்று கூறியுள்ளார். அதே நேரத்தில் அசாருதீன் தனது நிலையை தெளிவுப்படுத்திவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.
அந்தப்போட்டியில் காம்ப்ளி 29 பந்துகளில் 10 ரன் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். அவர் கண்ணீர்விட்டு கதறி அழுதவாறு மைதானத்தைவிட்டு வெளியே வந்தார். சூதாட்ட குற்றச்சாட்டில் அசாருதீனுக்கு 2000-ம் ஆண்டு ஆயுட்கால தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து அவர் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக