* புதுமாப்பிள்ளையான இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் தமிழகத்தை சேர்ந்த 25 வயதான அஸ்வின் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமாகி கலக்கி வருகிறார். வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இந்த டெஸ்டில் சதம் அடித்ததுடன் (103 ரன்), ஏற்கனவே பந்து வீச்சிலும் முத்திரை பதித்து இருந்தார். அவர் முதல் இன்னிங்சில் 156 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் 49 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே இன்னிங்சில் சதம் மற்றும் 5 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற சிறப்பை பெற்றிருக்கிறார். அதே சமயம் இந்த சாதனையை இரண்டு இந்தியர்கள் ஏற்கனவே செய்துள்ளனர். 1956-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் வினோமன்கட்டும் (184 ரன் மற்றும் 5-196), 1962-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்டில் பாலி உம்ரிகரும் (172 ரன் மற்றும் 5-107) இந்த அரிய சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.
* ஒட்டுமொத்த டெஸ்ட் வரலாற்றில், ஒரே இன்னிங்சில் சதம் மற்றும் 5 விக்கெட் வீழ்த்திய 20-வது வீரர் அஸ்வின் ஆவார். இந்த சிறப்பம்சம் இதுவரை 27 முறை நிகழ்த்தப்பட்டுள்ளன. கடைசியாக தென்ஆப்பிரிக்காவின் காலிஸ் 2002-ம் ஆண்டு வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்டில் இந்த சாதனையை படைத்திருந்தார். அவர் 1999-ம் ஆண்டும் இந்த சாதனையை செய்திருந்தார்.
* அஸ்வின் பேட்டிங் வரிசையில் 8-வது வீரராக களம் இறங்கி இந்த சதத்தை பதிவு செய்திருக்கிறார். இந்த வரிசையில் இந்திய தரப்பில் இதுவரை 13 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன. இதற்கு அடுத்தபடியாக பாகிஸ்தான் தரப்பில் 11 சதங்கள் 8-வது வரிசையில் எடுக்கப்பட்டிருக்கின்றன.
* இந்த டெஸ்டில் இரு அணிகளின் முதல் இன்னிங்சிசை எடுத்துக் கொண்டால், வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் 6 பேரும், இந்திய தரப்பில் 5 பேரும் 50 ரன்களுக்கு மேல் அதாவது மொத்தம் 11 பேர் அரைசதம் விளாசியிருக்கிறார்கள். டெஸ்டின் முதல் இன்னிங்சில் இரு அணி வீரர்களையும் சேர்த்து 11 அரைசதங்கள் அடிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்பு 6 டெஸ்ட் போட்டிகளில் முதல் இன்னிங்சில் தலா 10 அரைசதங்கள் எடுக்கப்பட்டதே இந்த வகையில் அதிகபட்சமாக இருந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக